சம்மாந்துறையில் காட்டு யானைகள் தொல்லை! கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென்று பொதுமக்கள் விசனம்

Sammanthurai ILM Nasim

சம்மாந்துறைப் பிரதேசத்தில காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்; தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்று (14)அதிகாலையும் காட்டு யானை ஒன்று வீட்டு மதில்களையும், கடை ஒன்றினையும், பயன்தரும் வாழை மற்றும் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

தமது வீட்டுச் சுவரையும், கடையையும் காட்டு யானை ஒன்று உடைத்துக் கொண்டிருப்பதனை அவதானித்த உரிமையாளர் அதனை விரட்டுவதற்கு முற்பட்டுள்ளார். இவ்வேளையில் காட்டு யானை தம்மை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்கு திரும்பிய வேளையில் உயிர் இழந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வயற் பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழும் பொது மக்கள் இரவு வேளையில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளார்கள்.

தினமும் இரவு வேளையில் காட்டு யானைகள் நடமாடிக் கொண்டிருப்பதாலும், பொது மக்களையும், பயன் தரும் பயிர் மற்றும் மரங்களையும் தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதனால் இரவு வேளைகளில் நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளார்கள்.

எனவே, காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரும், சம்மாந்துறை பிரதேச செயலகமும், அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் மூன்று பேர் காட்டு யானைகளின் தாக்குதலில் மரணமடைந்துள்ளார்கள். பலர் காயமடைந்துள்ளார்கள்.

காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பொது மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.