காட்டு யானை ஊருக்குள் புகுந்து பலத்த சேதம் விளைவிப்பு.

(ஹஸ்பர்)  திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் தொடர் காட்டு யானைகளினால் பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊருக்குள் நேற்று இரவு (12) புகுந்த காட்டு யானைகளினால் பலன் தரும் மரங்களான தென்னை,வாழை,கத்தரி,வெண்டி உள்ளிட்ட மரங்களை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியை அண்மித்த இடத்தில் பாதுகாப்பான யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் யானை படை எடுப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். மாலை நேரங்களில் தங்களது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அழைத்து சென்று பயத்துடனே வீடுகளுக்கு செல்ல நேரிடுகிறது.நிம்மதியாக தூங்க முடியாது மாலை வேலையிலேயே யானை ஊருக்குள் வந்து விடுகிறது இதனால் அச்ச சூழ் நிலையில் தாங்கள் காலத்தை கழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தோட்டச் செய்கையை வாழ்வாதாரமாக நம்பியே இருக்கும் போது அதனையும் யானை அழித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். பல தடவை உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இனிமேலாவது யானையின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம்  கோரிக்கை விடுக்கின்றனர்.