தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜேகதீசன் ஆகியோர் தெளிவுபடுத்தினர்.
இங்கு கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் இரண்டு வயதுடைய குழந்தைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடி செல்வதனால், அவர்களுக்கான பராமரிப்பு பாதிக்கப்படுவதாகவும், பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வயதெல்லையை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன் போது மாவட்ட, பிரதேச மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அமைச்சின் செயற்திட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இம்மீளாய்வுக் கலந்துரையாடலில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையிலான அதிகாரிகள், திட்டங்களை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்பன தொடர்பாகக் கலந்தாலோசித்தனர்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.வி.விமலவீர, உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.