மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்ட கலந்துரையாடல் அண்மையில் சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற போதே சபையின் செயலாளர் மக்களை ஆத்திரமடையச் செய்யும் வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் நகரசபையானது சபையின் கடந்த கால தீர்மானங்களை மீறிச் செயற்படுவதாகவும்,அபிவிருத்திகளை மேற்கொள்ள பின்னடிப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக கூட்டத்திற்கு தலைமை வகித்த நகரசபைச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரி நகரசபையில் உள்ள சில உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு பணியாற்ற முடியாது.அத்துடன் எனது அறிவுறுத்தல்களையும் சில துறை சார் உத்தியோகத்தர்கள் நடைமுறைப்படுத்துவதுமில்லை. அதனாலேயே பல அபிவிருத்திகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகரசபையில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்.
சாவகச்சேரி நகரசபையில் பணியாற்ற வேண்டும் என நான் விருப்பப்படவுமில்லை, விருப்பம் இன்றித் தான் கடமைக்கு வந்தேன்.
வெளியே நின்று விமர்சிப்பவர்களால் எனது ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது.என வீராப்பாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நகரசபை செயலாளரின் பொறுப்பற்ற கருத்தைக் கேட்ட முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன் கடமையை செய்ய முடியாவிட்டால் பதவி விட்டு விலகுங்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
|