(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கைத் திருநாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான அபிமானத்துடன் சேவையாற்றி தலைமுறைகள் கடந்து கலைகளால் தேசத்தின் எதிர்காலத்தினை உலகத் தரத்துக்கு கொண்டு சென்ற கலைஞர்களுக்கான மகுடம் சூட்டும் 38 ஆவது கலாபூஷணம் அரச விருது விழா – 2023 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் நடைபெறும்.
2022ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் கலைஞர்களான ஏ.சி. ராஹில் – நிந்தவூர் (இலக்கியம்), எம்.எம்.ஜமால்தீன் – ஏறாவூர் (இலக்கியம்), ஹாஜா அலாவுதீன் – பாலாவி (இலக்கியம்), எம்.கே.எம்.அஸ்வர் – மொரட்டுவ (ஊடகம்), எஸ். தஸ்தகீர் (இலக்கியம்) யூ.எல். கலீல் ரஹ்மான் – கல்முனை (ஊடகம்), ஏ.யூ.எல். அப்ரா உம்மா – சம்மாந்துறை (இலக்கியம்), ஏ. இஸ்ஸதீன் – சாய்ந்தமருது (நாட்டுப்புற கலைகள் – கோலாட்டம்), இஸட். ஏ. எம். ஹனீபா – கண்டி (இலக்கியம்), ஏ.எல்.ஏ. சுப்ஹான் அக்பர் – மாவடிப்பள்ளி (பாடல்) ஆகிய 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்னன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சதுரி பிந்து, கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண உட்பட மூத்த கலைஞர்கள் பலரும் அதிதிகளாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், இம்முறை கலாபூஷணம் விருதுக்காக இலங்கையின் நாலாபுறத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் கலைஞர்கள் பலரும் கௌரவம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.