தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக

மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டீ.அரங்க குணரெட்ண தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று (06) திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  இடம்பெற்ற நிகழ்வானது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உற்பத்தித்திறன் இணைப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டீ.அரங்க குணரெட்ணம் கலந்து சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், பிரதேச செயலாளர்கள் மற்றும் 5S தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனத்தலைவர்கள் உள்ளிட்டோர்
நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக
கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

5S தரச்சான்றிதழ் பெற்ற பின்னர் நிறுவனங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சேவை நாடி வருபவர்களுக்கு சிறந்த சேவையை எவ்வாறு வழங்குவது, 5S தரச் சான்றிதழின் நோக்கம் என்பவை தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன்,  இதன்போது 46 அரச நிறுவனங்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சுகாதர துறை சார்ந்து 38 நிறுவனங்களும், 2  பிரதேச செயலகங்களும், 6 ஏனைய திணைக்களங்களும் இச் சான்றிதழினை பெற்றுள்ளது.

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்றுக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.