மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அரசாங்க அதிபராக நிலையாக இருந்து வேலைகளை நன்கு திட்டமிட்டு செய்யக் கூடியவாறு பல வருடங்களாக அரசாங்க அதிபர்கள் நியமனம் செய்யப்பட வில்லை என உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கவலை அடைகின்றனர்.
இறுதிக்கால கட்டங்களில் தாங்கள் அரச நிருவாகத்திலிருந்து சரியான முறையில் சேவையாற்றி விடைபெறும் காலகட்டத்திலாவது அரசாங்க அதிபராக இருந்து விட்டு
செல்ல வேண்டும் என்று கூட சிலர் சிந்திப்பதில் நியாயங்களும் உண்டு.
தங்களின் நீதியான உழைப்பிற்கும், நேர்மையான சேவைக்கும் மகுடம் சூட்டுவதைப் போல சிந்திப்பதும், கடமைகளை பொறுப்பெடுப்பதற்கு முந்தி அடிப்பதும் நியாயமாகும். இச் சூழ்நிலையில் மாவட்டத்திற்கு சேவையாற்றுவதில் எந்தளவிற்கு விரைவாக விடை பெறுகின்றவர்கள் சேவை செய்து இருக்கின்றார்கள் என்னும் கேள்வி சமூகத்தில் தொக்கி நிற்கின்றன.
மாவட்டத்தில் பன்முகத்தன்மை கொண்ட அதிகார அரசியல் வளர்ச்சி அடையடைய திறமையான நிருவாக அரசாங்க அதிபருக்கு சாயம் பூசப்படும். அது அவர்களின் தலைமைத்துவத்திற்கு பாதிப்புக்களை உண்டாக்கும். அரசாங்க அதிபர் ஆகுவதற்காக சாயம் பூசுபவர்களும் உண்டு.
இவை அனைத்தையும் முறுகியடிக்க வேண்டுமானால் நல்லாட்சிக்குரிய கொள்கை அமுல்படுத்தப்பட்டு திறமைக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். நல்லாட்சி அமுல்படுத்தப்பட்டால் திறமையான, சிரேஸ்ட அதிகாரிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு திறமையானவருக்கு அநீதிகள் இழைக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுவதில் நியாயங்கள் உண்டு. முறையிடுவதும் நியாயமே. திறமை இல்லாத ஒரு சிலர் சாயங்களைப் பூசி பதவிக்காக சலாம் போடுவதும் நடக்கும் விடயங்களாகும்.
எது நடக்குதோ இல்லையோ முதலில் திறமையான சிரேஸ்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும். அவர் குறிப்பிட்ட வேலைகளையாவது செய்வதற்கு கால அவகாசம் உள்ளவராக இருப்பது நிருவாகத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
நல்ல ஒருஅரசாங்க அதிபர் நியமனம் செய்யப்பட வேண்டுமாயின் முறையற்ற விதத்தில் தகுதியற்றவர்களை நியமிக்க அதிகார அரசியல் உள்ளவர்கள் தலையிடுவது ஆரோக்கியமாக இருக்காது என மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.