அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கியதால் கைது

அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

(கனகராசா சரவணன்)

அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் மட்டு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.

திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனான போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்ரோலியாவிற்கு அனுப்புவதாக போலி அவுஸ்ரேலியா விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்

இதனையடுத்து அந்த விசாவில் இலங்கையில் இருந்து பயணிக்க முடியாது இந்தியா சென்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்த நிலையில் இந்தியா சென்ற குறித்த நபர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமான மூலம் செல்வதற்காக முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளதையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார்.

இதனையடுத்து 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியக பெற்ற போலி முகவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசாரிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (02) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.