நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கம் பணி பகிஸ்கரிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கையின் நீதித்துறை மற்றும் அதன் சுயாதீன தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு பணி பகிஸ்கரிப்பு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.றைசுல் ஹாதி தலைமையில் கல்முனை நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னால் இன்று (03) காலை நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இலங்கையின் நீதித்துறை அதன் சுயாதீன தன்மை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவது நீதித்துறையை கேள்விக்குட்படுத்தும் ஒரு செயற்பாடாகும். இதனை தடுக்கும் முகமாக நாம் இன்று இந்த பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்கிறோம். நீதித்துறையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது மற்றும் அடக்கி வாசிக்க எடுக்கப்படும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்து நீதித்துறையும் நீதித்துறை சார்ந்தவர்களையும் பாராளுமன்றத்தில் கடந்த காலங்களில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் முகமாக கௌரவ சபாநாயகர் அவர்களிடம் முன் அனுமதி பெற்று பாராளுமன்றத்தில் உரையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதித்துறைக்கும் சட்டவாக்கத் துறைக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்காகவே இன்று நாம் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றோம். நீதித்துறை சட்டவாக்கத்துறை, நிறைவேற்று துறை என்பன அதற்குரிய சுயாதீன தன்மையோடு தொடர்ந்தும் செயல்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்து அரசாங்கம் சுயாதீனமான புலன் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கென சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நிறுவி பரிபூரணமான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் நாம் வினயமாக கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.