பிள்ளைகள் ஏக்கத்துடன் வருகின்றனர் : ஆசிரியர்களே வழிகாட்டுங்கள்

உங்களிடம் வருகின்ற அத்தனை பிள்ளைகளும் தாம் சிறந்தவர்களாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன்தான் வருவார்கள். குறிப்பாக நானும் கல்விமானாக, நானும் வெற்றியாளனாக வருவேனா? என்ற ஏக்கத்துடன்தான் பிள்ளைகளும் பாடசாலைக்குள் வருகின்றனர். உங்களிடம் ஒப்படைக்கப்படும் அப்பிள்ளைகளை தாயாக, தகப்பனாக அணுகி வாழ்க்கைக்கான வெற்றிகளை வழிகாட்டுங்கள் என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய 140வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு நிகழ்ச்சியும் இன்று(01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வறைகூவலை விடுத்துள்ளார்.

மேலும், அவர் அங்கு கருத்துக்கூறுகையில்,

கல்விக்கான தேடலும் அவசியமும் உணரப்பட்ட நிலையில் பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றிருக்கின்றேன். இப்பிரதேசத்தில் இரண்டு விடயங்களை கடினமான விடயங்களாக உணர்ந்திருக்கின்றேன். மாணவர்களின் இடைவிலகல், விஞ்ஞானக்கல்வியை அபிவிருத்தி செய்வதில் உள்ள சவால். இவற்றைதான் எனது சவாலாக கருதுகின்றேன். பாடசாலையொன்றிலே தரம் 1இல் கல்வி கற்க வருகின்ற மாணவர் தரம்11இல் தோல்வி அடைந்து செல்கின்றார் 13வருடம் கல்வி கற்ற மாணவர் உயர்தரத்தில் சித்தியடையாது செல்கின்றார். இவை நாங்கள் அனுபவத்தில் கண்ட வலிகளாக உள்ளன.

வெற்றி பெறும் மாணவர்களை வெற்றி பெற வைப்பதுதான் இவ்விளம்பர உலகத்தில் முன்நிற்கின்ற தன்மையை காண முடிகின்றது. தாங்க வேண்டிய பிள்ளைகள், ஊக்கப்படுத்த வேண்டிய பிள்ளைகள் தொடர்பிலான அக்கறை அருகிக்கொண்டு செல்கின்றது.

அன்பான ஆசிரியர்களுடன் வினயமாகவும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். உங்களிடம் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளை தாயாக, தகப்பனாக அப்பிள்ளைகளை அணுகி வாழ்க்கைக்கான வெற்றிகளை வழிகாட்டுங்கள். உங்களிடம் வருகின்ற அத்தனை பிள்ளைகளும் ஏக்கத்துடன் வருவார்கள். நானும் கல்விமானாக, நானும் வெற்றியாளனாக வருவேனா? என்ற ஏக்கத்துடன்தான் பிள்ளைகளும் பாடசாலைக்குள் வருகின்றனர்.

ஒவ்வொரு பிள்ளைக்குமான குடும்பச் சூழ்நிலை, பிரதேச சூழ்நிலை, தொழில்சார்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கின்ற சூழலில் நாங்கள் பொதுமைப்படுத்தப்பட்ட கற்பித்தலை மேற்கொள்வது இன்றைய காலகட்டத்தில் பொருத்தமானதாக அமையாது என நான் நம்புகின்றேன். இக்கல்விப்புலத்திலே இருக்கின்ற மிகப்பெரிய ஏக்கம் மாணவர்கள் ஒழுக்கத்தில் இல்லையென்பதுதான் ஆகவே இவ்வொழுக்கத்தை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பில் தயார்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.

மிகவும் சவாலான காலத்திலே கல்விப்பணியிலே கடமையாற்றப் பணிக்கப்பட்டுள்ளோம். மாணவர்கள் ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் பின்னோக்கி செல்கின்றமையை காண்கின்றோம்.

மாணவர்களே! உங்களின் ஒழுக்கமும் நடத்தையின் பெறுமதியும்தான் வாழ்க்கையின் உச்சம். எல்லா விடயங்களையும் தாண்டி ஒழுக்கமே உயர்வானது.
ஒவ்வொரு வீடுகளிலும் பிள்ளைகளை முகாமைத்துவம் செய்வதற்கு பெற்றோர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பிள்ளைகளை வீதிக்கு இறக்கி விளையாட விடுவதற்கு அச்சப்படுகின்றோம். காரணம் சமூகம் தவறாக செல்கின்றதா? தெரியவில்லை.

ஆளுமையுள்ள, ஒழுக்கமுள்ள சமூகத்தினை உருவாக்க அனைவரும் முன்வாருங்கள் அதற்காக நானும் தயாராக இருக்கின்றேன். என்றார்.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், வித்தியாலய அதிபர் க.அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமையுடன் சாதனையாளர்களுக்கு நினைவுச்சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.