தலவாக்கலை பி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு ஒரு சக்தியுள்ள விவசாய சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என இராஜாராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் தேயிலை தொழில், மரக்கறி உற்பத்தி தொழில் மற்றும் சுற்றுலா தொழிலை பிரதான தொழிலாக மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளை தொழிலாளர்களின் தொழிற் சங்கங்கள் தீர்த்து வைக்கின்றன. சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் பொழுது அரசாங்கமே அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் மரக்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசாங்கமோ சம்பந்தப்பட விவசாய அமைச்சோ கண்டுகொள்வதில்லை. ஆகையால் மரக்கறி உற்பத்தியில் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க விவசாய சங்கம் ஒன்றை உருவாக்க அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைய வேண்டும் அரசாங்கத்திடம் சரியான விவசாய கொள்கை இல்லை. விவசாய திணைக்களத்தில் சரியான தரவுகள் இல்லை. உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு சரியான விலை உற்பத்தியாளர்களுக்கு கிடைப் பதில்லை. இதனால் மரக்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுகின்றார்கள்.நுரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை ஒரு கிலோ 50 ரூபாவிற்கு விவசாயிகளிட மிருந்து கொள்வனவு செய்து அதே மரக்கறியை கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களில் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பாவனையாளர்களும் அதிக விலை கொடுத்து பாதிக்கப்படுகின்றார்கள். இடைதரகர்கள் இலாபம் அடைகின்றார்கள். மழைக்காலத்தில் மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கத்தில் எந்தவித நிவாரணமும் கிடைப்பதில்லை. அதே வேளை எந்த காலத்தில் என்ன பயிரிடுவது என்பதை பற்றி ஒரு விளக்கம் இல்லை. உதாரணத்திற்கு நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தற்பொழுது லீக்ஸ் எல்லா இடங்களிலும் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றது. எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில்் லீக்ஸ் பயிரிடப்பட்டதால் விளைச்சலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. லீக்ஸ்சின் விலை குறைந்துள்ளது நுவரெலியாவில் தற்பொழுது ஒரு கிலோ லீக்ஸ் 20 ரூபாவிற்கு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு சில விவசாயிகள் உற்பத்தி செய்த லீக்ஸ்யை விற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றார்கள். எனவே எந்த காலத்தில் என்ன மரக்கறி பயிரிடப்பட வேண்டும். என்பதை விவசாயிகளுக்கு தெழிவுபடுத்து வதற்கும் மரக்கறிகளுக்கு ஒரு நிர்ணைய விலை கொண்டு வருவதற்கும் விவசாயத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் ஒரு அதிகார ஒரு அதிகார சக்தியுள்ள விவசாய சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.