மாளிகைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் பூர்த்தி

(ஏ.எஸ்.மெளலானா)

மாளிகைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாளிகைக்காடு பிரதேசத்தின் முழுக் கரையோரத்திற்குமாக சுமார் 850 மண் மூடைகள் பாதுகாப்பு அணையாக அடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாளிகைக்காடு பிரதேசத்தில் உக்கிரமடைந்திருந்த கடலரிப்பு காரணமாக அங்குள்ள கலாசார மண்டபம் உட்பட பொதுக் கட்டிடங்கள் மற்றும் வாடிகள் கடுமையாக சேதமடைந்து வந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கரையோரம் பேணல் தினைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் பயனாக அங்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழு கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வாக அலைத் தடுப்புச் சுவர் அமைப்பதெனவும் முதற்கட்டப் பணியாக மண் மூடையடுக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதெனவும் தீர்மானித்து, சில தினங்களிலேயே அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பணிகள் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறியியலாளர் எம்.துளசிதாசன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக சிவில் அமைப்புகளின் சார்பில் இவ்வேலைத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச்.நாஸர் குறிப்பிட்டார்.