மொரீஷியஸ் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில்

ஆஸிடாக்டர் சிதம்பரகுமாருக்கு தமிழ்மாமணி விருது!
——————————————————
                   – ஐங்கரன் விக்கினேஸ்வரா
 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மொரீஷியஸ் முருகன் அறக்கட்டளை, சர்வதேசப் புலம்பெயர் தமிழர் சங்கம் இணைந்து நடத்திய பதினாறாவது உலகத் தமிழ் மாநாடு மொரீஷியஸில் செப்டம்பர் 24 முதல் நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாச்சார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் டாக்டர் சிதம்பரகுமார் தேவேந்திரம் பிள்ளை அவர்களுக்கு
இந்த சர்வதேச மாநாட்டில் “உலக தமிழ்மாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பேராசிரியர் பஞ். இராமலிங்கம், சிறப்புத் தலைவர் வழக்கறிஞர் தேவராஜ் பொன்னம்பலம், மாநாட்டுத் துணைத் தலைவர் மொரீஷியஸ் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன், மாநாட்டுத் தலைவர் மொரீஷியஸ் வழக்கறிஞர் அமுது செழியன், தலைவர் பொன்.சிறீசிவகன், மாவை தங்கராசா ஆகிய முக்கிய தமிழ் ஆர்வலர்கள் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டில் தமிழர் கலைகள்- பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி, தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு, தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல், தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு, தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.
 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மொரீஷியஸ் நாட்டில் வலுவாக
செயற்பட்டு வருவதோடு பல நாடுகளில் கிளைப் பரப்பி பதிவு பெற்றுச் சிறந்த முறையில் இயங்குகின்றது. உலகளாவிய மாநாடுகள் மூலம் இவ்வியக்கம் தமிழர்களின் கலை பண்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தமிழ் மொழிக் கல்வி, தமிழர் வரலாறு ஆவணச் சேமிப்பு, தூய தமிழ் வழக்கு தமிழ்ச் செம்மொழி உருவாக்கம், தமிழ் வழி இறைவழிபாடு, வரலாற்று ஆவணச் சேமிப்பு ,தமிழ் மரபுகளை நிலைப்படுத்தல்,தமிழர் இறையாண்மை,தமிழ்ப் பாதுகாப்பு, தைப்பொங்கல் தமிழர்த் திருநாள், உலகத் தமிழர்களிடையே ஒற்றுமை பேணல் ஆகிய செயற்பாடுகளில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.
மொரீஷியஸில் நிகழும் பதினாறாவது உலகத் தமிழ் விழாவாக இம்மாநாட்டில் தமிழர் வரலாற்றுத் தொன்மை ஆய்வரங்கமும் பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கமும் அரங்கமும் – அதிர்வும் என்னும் பல்சுவை நிகழ்வும் நடனம் இன்னிசை பரதம் நாடகம் நாட்டுக்கூத்து பலவேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. தமிழ் அறிஞர்களின் துறை சார்ந்த புத்தக ஆய்வுகள் இந்த மகாநாட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாச்சார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் டாக்டர் சிதம்பரகுமார் தேவேந்திரம் பிள்ளை அவர்களுக்கு
இந்த சர்வதேச மாநாட்டில் “உலக தமிழ்மாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.