மாகாண மட்ட போட்டியில் பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்.

(றியாஸ் ஆதம்)  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலய மாணவன் எம்.எச்.எம்.நிப்றான் தங்கப்பதக்கத்தினை பெற்று தனது பாடசாலைக்கும், வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. இதன்போது முதலாம் நாள் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற 18வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய நிப்றான் 6.58மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
சாதனை வீரனுக்கும் பயிற்றுவித்த விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஏ.எச்.எம்.தபுறானி, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எம்.சாஜின், பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் எஸ்.எச்.தம்ஜீத் மற்றும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும், மாகாண மட்டத்திலான சிறப்பு மெய்வல்லுநர் விருதினையும் நிப்றான் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.