மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி மாதிரி எச்சங்கள் பரிசோதனைக்கு விலைமனு கோரப்பட்டபின் அனுப்பப்படும்.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழியில் அகழ்வு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான விலைமனு கோரல் இன்னும் நிறைவு பெறாது இருப்பதால் இது பூர்த்தியானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (13) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மீண்டும் விசாரனைக்கு அழைக்கப்பட்டது.

ஏற்கனவே இத்திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கான நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில்

புதன் கிழமை (13) அழைக்கப்பட்ட இவ்வழக்கின்போது அரச சட்டத்தரனியால் காபன் பரிசோதனைக்கான விலைமனு கோரல் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் இருப்பதால் இது பெற்றுக் கொண்ட பின்பே தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளை அனுப்புவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியுள்ளது என மன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் மன்றில் முன்னிலையாகி இருந்த காணாமல் போனோர் அலுவலக சட்த்தரனியும் இதற்கான நிதி வழங்கலை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக மன்றில் தெரிவித்திருந்தார்..

ஆகவே இந்த விலைமனு பெற்று நீதிமன்றில் தாக்கல் செய்து மேலதிக நடவடிக்கைக்காக இவ்வழக்கானது 08.11.2023 மீண்டும் அழைக்கப்படும் என  தெரிவித்து நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.