உன்னதமான ஊடகவியலாளர் ஏ.எல். எம் சலீம்

(றமீஸ் அப்துல்லா தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

நிந்தவூர் நிருபர்  ஏ.எல். எம் சலீம் என்று அறியப்பட்ட பத்திரிகையாளனுக்கு இன்று (14.09.2023) வயது 75 ஆகிறது. அதே நேரம் அவரது ஊடகத் தொழிலுக்கு வயது 57. இத்துணை அனுபவமுள்ள ஊடகவியலாளன் ஒருவரை பற்றி எழுதுவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவரது ஊடகப் பணிக்கு 50 வயதான போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஒரு நினைவு மலரினை வெளியிட்டது. அப்போது என்னிடமும் ஒரு கட்டுரை கேட்கப்பட்டது. ஏதோவொரு காரணத்தினால் அப்போது அதனை எழுத முடியாமல் போய்விட்டது. இப்போது அந்த குறையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. சலீம் எழுதப்பட வேண்டியவர்; பதிவுசெய்யப்பட வேண்டியவர் பாடப்பட வேண்டியவர். கொண்டாடப்பட வேண்டியவர்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த செய்ய வேண்டிய சக்திகளுள் மிக முக்கியமானது ஊடகத்துறை. சட்டம், நீதி, நிர்வாகத்துறை முதலானவை போல ஊடகத்துறையும் கருதப்பட வேண்டியதொன்று எனக் குறிப்பிடுவர். இவற்றுள் முதன்மையானது ஊடகத்துறை என்று குறிப்பிடுவாரும் உளர். இத்துணை சக்தி வாய்ந்த துறையிலேதான் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சலீம் அவர்கள்.

அந்தக் காலத்தில் இந்தக் காலத்தை போல அதிக ஊடகங்களின் செல்வாக்கு இருக்கவில்லை. ஆனால் ஊடகங்களுடனான மக்களின் ஈடுபாடு வலுவுள்ளதாக இருந்தது. பத்திரிகைகள்தான் அந்தக் காலத்து மக்களின் ஒரே ஊடகமாக இருந்தது. அது பிந்திக் கிடைக்கின்ற செய்தியாக இருந்தாலும் நிரந்தரமானதும் வலுவுள்ளதும் பாதுகாப்பானதும் நினைத்த நேரத்தில் அனுபவிக்கக் கூடியதுமாகவும் இருந்தது. அவ்வாறு பத்திரிகைகளை நாங்கள் அரவணைத்து இருந்த காலத்தில் கல்முனை பகுதியிலிருந்து றஷீட், பகுர்டீன், சலீம் என்று ஒரு சிலர்தான் பத்திரிகை நிருபர்களாக இருந்தனர். அப்போது சலீமின் பத்திரிகைப் பணி வீரகேசரியில்தான  தொடங்கியது அது எஸ்.டி.சிவநாயகத்தின் காலம். அவர் ஐக்கிய தீபம், உதயம், தினகரன், சுதந்திரன், வீரகேசரி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். எம்.டி. குனசேனாவின் வெளியீடாக இருந்த தினபதி, சிந்தாமணி, சூடாமணி பத்திரிகைகளிலே அவர் பணியாற்றிய காலம் பொற்காலமாகும். அக்காலத்தில் தனக்கென எழுத்தாளர் பரம்பரையையும் ஊடகவியலாளர் பரம்பரையையும் உருவாக்கியவர் அவர். அவர்களை உயரச் செய்தவர். அவர்களில் ஒருவராகவே நிந்தவூர் சலீம் மேற்கிழம்புகிறார்.
ஊடகவியல் பணி சாதாரணமானதல்ல. மிகக் கஷ்டமானதாகும். ஊடகங்களோடு தொடர்புபடுவதென்பது உலகத்தோடு தொடர்புபடுகிற விடயமாகும். ஊடகவியலாளர்கள் மிகப் பொறுப்பும் மரியாதையும் மிக்கவர்கள். அவர்கள் மிகப் பிரசித்தமாக விளங்கினார்கள். ரிச்சர்ட்.டி. சொய்ஸா, பிரகீத் எக்னெலிகொட, லசந்த, தராக்கி இப்படி பல ஊடகவியலாளர்களை இன்றும் நாம் மறக்க முடியாதுள்ளது. இப்படி பணி செய்பவர்கள் மிகமிகக் குறைவு.
இன்று நம்மில் சில ஊடகவியலாளர்கள் இந்த பணியினை அற்பமாகக் கருதுகிறார்கள். அடிப்படை தகவல்களோடு மாத்திரம் தமது செய்தியை குறுக்கிக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுப்பதனை மாத்திரமே தமது பணியாக கருதுகிறார்கள். தாம் எழுதிய செய்தியை பிரசுரிப்பதை விட நிகழ்ச்சியை ஒழுங்கு செய்பவர்கள் எழுதிக் கொடுக்கின்ற செய்தியை வாங்கிப் பிரசுரிப்பவர்களும் உண்டு.
செய்தி சேகரிப்பது என்பது மிக ஆபத்தான பணியும்கூட. எல்லா வேளைகளிலும் சுதந்திரமாகவும் இயல்பாகவும் செய்தியை சேகரித்து விட முடியாது. விபத்து நடந்த இடத்திலும் குண்டு வெடித்த இடத்திலும் தீப்பற்றிய இடத்திலும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள இடங்களிலும் தமது உயிரை பணயம் வைத்தே செய்திகளை சேகரிக்க வேண்டும். யுத்த காலத்தில் யுத்த பிரதேசங்களிலும் செய்திகளை சேகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் அரசியல் விடயங்களை செய்திகளாக கொண்டு வருவதும் மிகவும் சுவாரஸ்யமான பணியாகும். அரசியல்வாதிகளின் உள்ளம் அறிந்து செய்திகளை எழுத வேண்டிய நிலைக்கு செய்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களுடைய அட்டகாசங்களுக்குள் நின்று உண்மைகளை எழுதுவது மிகக் கஷ்டமான பணியாகும். அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்பட்ட பல செய்தியாளர்களும் இருக்கிறார்கள்.
ஈழத்தில் 1980கள் ஊடகவியலாளர்களுக்கு மிகச் சோதனைமிக்க காலமாகும். அரச ஊடகங்களும் தனியார் ஊடகங்களும் ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை எழுதின. ஊடகங்கள் இனத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டன. ஊடகவியலாளர்கள் இனத்தின் பெயரால் அவஸ்தைப்பட்டனர். இந்த காலங்களையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஏ.எல். எம். சலீம்.
தமிழர் அரசியல் விடுதலையை உரமூட்டுவதிலும் முஸ்லிம் அரசியல் விடுதலைக்காக பாடுபடுவதிலும் அவர் அக்கறையோடு செயற்பட்டார். அவ்விரு கட்சிகளினதும் தலைவர்களோடு சரிசமமாக தனது எழுத்துக்களை பகிர்ந்து கொண்டவர். தன் அரசியல் அடையாளம் வெளிப்படாது தானொரு ஊடகவியலாளர் என்பதையே அவர் எப்போது அடையாளப்படுத்தினார். தமிழ் முஸ்லிம் தீவிர முரண்பாட்டு நெருக்கடிக்குள் தமிழ்- முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தன்னை நிலைப்படுத்தியவர்.
ஒரு பிரதேசத்திற்குள் மாத்திரம் தன்னுடைய பணியை வரையறுத்துக் கொண்டவர் அல்ல அவர். வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் இடமெல்லாம் அவர்களின் நடப்புக்களை ஆவணப்படுத்தியவர். வடக்குக்கென்று இருக்கின்ற விசேடமான தனியான பத்திரிகை உலகுக்குள் கிழக்கு மக்களின் செய்திகளை அடையாளப்படுத்தியவர். முஸ்லிம்களுக்குள் இருந்த தனித்தனி அரசியல் அபிலாசை கட்சி வேறுபாடுகளுக்குள் அவர் ஒருபோதும் அமிழ்ந்து விடவில்லை. அப்போதும்கூட தான் ஊடகத்துறையின் விழுமியங்களை பாதுகாத்து எழுதுகின்றவராகவே இருந்தார். அதனால் அவரை எல்லா அரசியல் தலைவர்களும் ஒருங்கே பாராட்டினர். அப்படியான வாய்ப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது சலீமுக்கு வாய்த்திருந்தது. அதற்கு அவரது பொன் விழா மலரே சாட்சியாகும்.
காலம் கடந்தும் ஓர் உன்னதமான ஊடகவியலாளர் என்ற நாமத்தோடு வாழ்பவர் சலீம் அவர்கள். எந்த கட்சிக்கும் சேவகம் செய்யாது ஊடகத்துறைக்கு வாழ்நாளெல்லாம் சேவகம் செய்து வாழ்பவர். அதற்காக தேசியம் முதல் பிரதேசம் வரையும் மேலும் அரசு சார்பாகவும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் சார்பாகவும் ஊடகத்துறை சார்பான பல விருதுகளை வென்றவர். அவர் இன்னும் பல்லாண்டு காலம் ஊடகத்துறைக்கு பணியாற்ற வேண்டும் என நாம் ஆசிக்கின்றோம்.
கிழக்கிழங்கையினைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் கிழக்கு இலங்கை செய்திளார் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் 14.09.2023 அன்று தமது 75 ஆவது அகவையில் கால்பதிக்கின்றார்.
இதனையொட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறையின் சிரேஷ் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி