தொழுநோய் தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டம். 

(றியாஸ் ஆதம்)  தொழுநோயை கல்முனை பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் கல்முனைப் பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பன இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (07) நடாத்திய தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழுநோயை ஒழிக்கும் வகையில் எமது பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவினர் அரச வைத்திய சாலைகளுக்கு மாத்திரமன்றி தனியார் சிகிச்சை நிலையங்கள் மத நிறுவனங்களுக்கும் சென்று இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
விசேடமாக வெளி நோயாளர் பிரிவுகளில் இவ்வாறான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனைத்து நிறுவனங்களுக்கும் விநியோகித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.பஸாலினது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.ஏ.வாஜித், தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் ரணவீர, திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தோல்நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஐ.எல்.மாஹில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இருந்து தொழுநோய் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.