கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாண மட்ட சம்பியனாக காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவிப்பு.

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகளானது மூன்று நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது. அதில் 16 வயதுக்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி அணியும் பங்குபற்றியது.

இதில் முதல் சுற்றில் பாஞ்சேனை பாரி வித்தியாலத்துடன் 1:0 என்ற கோல் அடிப்படையிலும், இரண்டாவது சுற்றில் மூதூர் மத்திய கல்லூரியுடன் போட்டியிட்டு 2:0 கோல் என்ற அடிப்படையிலும், காலிறுதிப் போட்டியில் நாவற்காடு நாமகல் வித்தியாலயத்துடன் 1:0 என்ற கோல் அடிப்படையிலும் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கிழக்கின் பலம் பொருந்திய கிண்ணியா மத்திய கல்லூரியுடன் போட்டியை சமன் செய்ததுடன் பெனால்டி முறையில் 4:3 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தது.

இறுதிப் போட்டியில் கிழக்கின் மற்றுமொரு பலம் பொருந்திய அணியான கிண்ணியா அல்-அக்ஷா மகா வித்தியாலயத்தை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப்போட்டிக்காக இரவு பகல் பாராது அயராது பயிற்சியில் ஈடுபட்டு குறித்த வெற்றியை ஈட்டிய மாணவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த மாணவர்களுக்கு இணையாக நின்று பயிற்சிகளை வழங்கி, போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றயீட்டுவதற்கு உறுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் கே.புருசோத்மன், பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.எம். சஜான் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களாக வி.மோகனகுமார், ரி. கிருபாகரன் மற்றும் எப்.எம்.நஸ்பர் ஆகியோருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றியீட்ட பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் இப்போட்டிகளில் பங்குபற்ற உத்வேகமளித்த கல்வி அதிகாரிகள், கல்லூரியின் ஏனைய ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு கிழக்கு மாகாண 16 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி அணியை வரவேற்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.