மட்டு. மேற்கு கல்வி வலயம் மாகாணத்தில் மூன்றாம் நிலை

அண்மையில் வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேருக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மூன்றாம் நிலையை பெற்றுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் சித்தி வீதத்தின் அடிப்படையில் இந்நிலையை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அடைந்துள்ளது. 77.7வீத சித்தியைப் பெற்று இந்நிலைக்கு வந்துள்ளது.

மாகாணத்தில் மூதூர் கல்வி வலயம் முதலிடத்தினையும் கிண்ணியா கல்வி வலயம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளரும் தற்போதைய மாகாண கல்விப் பணிப்பாளருமான செல்வி அகிலா கனகசூரியம் அவர்களின் திட்டமிடலிலும் வழிகாட்டலிலும் ஆலோசனைக்கும் விசேட செயற்றிட்டக்களுக்கும் அமைய வலய பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் முயற்சியினால் இப்பெறுபேறு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கல்வி வலயம் ஆரம்ப காலங்களில் தேசிய பரீட்சைகளில் இறுதி நிலையில் காணப்பட்ட போதும் அகிலா கனகசூரியம் வலயக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து படிப்படியாக வலயம் உயர் நிலையை பெற்று வந்துள்ளமை எடுத்துக் காட்டத்தக்கது.