மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் மற்றும் அவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்கும்  கலந்துரையாடல்.

  • (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்வைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அலுவல்கள் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இக்காணிகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.மக்கள் எதிர்கொள்ளும் காணி இழப்பு  அல்லது காணி இன்மை  போன்ற தமது காணிப் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்து வருகிறார்கள். அதனால் அரசாங்கமாக சகல சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களையும் ஒன்றிணைத்து  இக்காணிப் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்வதற்காக  மாவட்ட மட்டங்களில் இவ்வாறான கலந்துரையாடல்களை நடாத்தி, உடனடித் தீர்வை பெற்றுக் கொடுப்பதே  ஒரே நோக்கமென ஜனாதபதி செயலகத்தின் சமூக அலுவல்கள் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படும் அரச, தனியார் மற்றும்  விவசாயக் காணிகள் தொடர்பான காணி உரிமைகள், உறுதிப் பத்திரங்களை பெறுதல், காணிகளில் பயன்படுத்தப்படாது காணப்பட்ட தரிசு நிலங்கள் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் உரிமம் கோரல், காணி இழப்புக்கள், உரிமம் இருந்தும் எல்லையிடப் படாத காணிகள் வெவ்வேறு திட்டங்களுக்குள் அறிந்தும் அறியாமலும் உள்வாங்கப்பட்டிருத்தல், காணி இல்லாதவர்கள் அரசாங்கத்திடம் காணி கோரல், போன்ற பல்வேறு விடயங்கள்   குறித்து இதன்போது  பிரதேச செயலாளர்களால் முன்வக்கப்பட்டது.

மாவட்டத்தில் இக்காணி விவகாரங்களுடன்  தொடர்புபட்ட அரச நிறுவனங்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள்,  மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள்  என்பன தொடர்பாக உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக சுனாமி வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுக் காணிகளுக்கு இதுவரை உரிமைப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாதிருப்பின் அவற்றுக்கான அளிப்புப் பத்திரங்களை விரைவில் பெற்றுத் தருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் இங்கு நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, மாகாணக் காணி ஆணையாளர் டி. எம். ஆர். சி. தசநாயக்க மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உட்பட  மாவட்டத்தின் சகல அரச திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2023-09-04 at 11.02.35 (1).jpegWhatsApp Image 2023-09-04 at 11.02.36 (1).jpegWhatsApp Image 2023-09-04 at 11.02.32.jpegWhatsApp Image 2023-09-04 at 11.02.36.jpegWhatsApp Image 2023-09-04 at 11.02.35.jpegWhatsApp Image 2023-09-04 at 11.02.27.jpeg