ஈழத் திருநாட்டில் பல கோயில்களில் தேரோட்டம் இன்று இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர் கொழும்பு பம்பலபிட்டி முருகன் ஆலய ரதோற்சவம் மாத்தளை முத்துமாரி அம்மன் தேர் என்று இப்படி பல இடங்களில் தேரோட்டம் நிகழ்கின்றது.
கிழக்கிலங்கையில் தேரோட்டம் என்ற சிறப்பு பெயரால் வழங்கப்படும் ஒரே ஒரு இடம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம் ஆகும். உற்சவ காலங்களில் ஆலயம் செல்லும் எந்த ஊர் மக்களும் தேரோட்டத்திற்கு செல்கின்றோம் என்று கூறுவது உண்டு. இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தேரோட்டம் கண்ட ஈழத்திலே முதல் ஆலயம் என்ற சிறப்பும் பெருமையும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு உண்டு என்று கூறின் மிகை ஆகாது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேசத்து கோயில்களில் ஒன்றாக விளங்கும் இவ்வாலயம் வீர சைவ மரபினை உடையது. ஏராளமான இந்துக்கள் வழிபாடு இயற்றி வரும் இவ்வாலயம் ஒரு சமூக ஒன்றிணைப்பிற்கான இடமாகவும் விளங்குகின்றது. மட்டக்களப்பு வாவியின் மேற்கு கரையில் அமைந்துள்ள பாலோடு தேனாறு பாய்ந்து ஓடும் நன்னாடு என்று சிறப்பித்து கூறப்படுகின்ற மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பில் இருந்து மண்முனைக்கு போகும் வீதியூடாக 12 முஆ தூரத்தில் அமைந்துள்ளது.
இலங்கையில் விஜயன் வருவதற்கு முன்னரே ஈழத்தில் முக்கியமான ஐந்து ஈச்சரங்கள் இருந்துள்ளன அவையாவன,
1. வடக்கு திருத்தம்பலேஸ்வரம்
2. யாழ்ப்பாண நகுலேஸ்வரம்
3. வடமேற்கு மன்னாரில் திருக்கேதீஸ்வரம்
4.கிழக்கு திருகோணமலை திருக்கோணேஸ்வரம்
5.மேற்கு சிலாபம் முன்னேஸ்வரம்
என்பதை இலங்கையின் வரலாற்று ஆவணமான மகா வம்சம் குறிப்பிடுகின்றது. ஐந்து சிவாலயங்கள் இருந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை முதலான நூல்கள் கூறுகின்றன. அவை கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் திருத்தம்பலேஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் என கூறப்பட்டாலும் அவை போன்ற தொன்மையை உடையது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ஆகும்.
இறைவனால் அருளைப் பெற்ற வேதாகமங்கள் தென்னாடு என்றும் அதனால் அந்நாடு புனிதமானது என்றும் மாறாத தென்திசை வையகம் சுத்தமே என்றும் திருமந்திரம் கூறுகின்றது. இதன் காரணமாகத்தான் தென்னாடுடைய சிவனே என்றும் எந்நாட்டவர்க்கும் இறைவன் சிவனே என்பதனையும் திருவாசகம் எமக்கு தெரிவித்தது. இலங்கை தென்னாட்டின் ஒரு பாகம் என்பதனால் திருமூலர் இலங்கையை சிவ பூமி என சிறப்பித்து கூறியுள்ளார். இது தென்கிழக்கு பகுதிக்கு பொருத்தமாக அமையும் இப்பகுதியில் தான் கதிர்காமம் திருக்கோயில் உகந்தை மண்டூர் போரதீவு வெருகல் தாந்தாமலை கொக்கட்டிச்சோலை தம்பலகாமம் திருக்கரசை போன்று சிவ முருக தலங்கள் ஒரே நிலக்கோட்டில் அமைந்திருக்க காணலாம். இராவணன் சிவ பக்தன் இவன் ஆட்சி செய்த பிரதேசம் தென்னிலங்காபுரியாகும். இது திருவண்ணாமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்த லிங்கக் கோயிலாகும்.
ஆரம்பத்தில் வேடர்களால் பூசிக்கப்பட்டு பின்னர் இளவரசி உலகநாயகியால் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. ஆதி திராவிடர் வழிவந்த வேடர்களில் ஒருவனான விகடனால் கண்டுபிடிக்கப்பட்டு கொக்கு நெட்டி மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு கலிங்க வம்சத்தை உலக நாச்சியால் கோயில் அமைத்ததாக கூறப்படுகின்றது. இது மேலும் தொடர்கிறது கலிங்கமாகவும் காலத்தில் மிகவும் புகழ் பெற்றது.
கலிங்கமாகோன் காலம் கிபி 1215 தொடக்கம் 1245 வரை (40 வருடங்கள்) என்பது கிழக்கிலங்கையில் ஒரு பொற்காலமாகும். மாகோனும் குளக்கோட்டானும் பல சட்ட திட்டங்களையும் வன்னிமைகளையும் வகுத்தனர். கோயில் நிர்வாக முறைகளை சீர்படுத்தினர். கொக்கட்டி சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தில் முற்குகர் இனத்தில் கலிங்க குடி படையாட்சி குடி உலகநாச்சி குடி என்போர் முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ளார். இன்றும் கலிங்கமாகோன் கட்டளைகள் பின்பற்றப்படுகின்றன. குளக்கோட்டன் திருகோணமலை பிரதேசத்திலும் மாகோன் மட்டக்களப்பு திருக்கோயில் ஆகிய பிரதேசங்களிலும் மகத்தான பணிகளை ஆற்றினர்.
மாகோன் இப்பகுதி ஆலயங்களில் நிர்வாக நடைமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தினான்.
இன்று வரை மாகூன் வகுத்த முக்குகர் வன்னிமை கொக்கட்டி சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. கொடியேற்றம் திருவிழாக்கள் தேரோட்டம் திருவேட்டை கஞ்சி முட்டி கூறல் கீர்த்தோற்சவம் என்பன வருடாந்த மகோற்சவத்தினை சிறப்பிக்கும் நிகழ்வுகள் ஆகும்.
ஆவணி மாத வளர்பக்க பிரதமையில் கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகும். கடந்த 2023 8 19 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2023 8 23 வரை சுவாமி உள்வீதி வலம் வருதல் நிகழ்வு நடைபெற்று அதனைத் தொடர்ந்து 2023 8 24ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 2023 9 2 ஆம் தேதி சனிக்கிழமை வரை திருவிழா உபயக்காரர்களின் குடிரீதியான திருவிழாக்கள் இடம்பெற்று திருவிழாக்களின் போது சுவாமி உள் வீதி வெளி வீதி உலா வலம் வரும். இதனைத் தொடர்ந்து 2023 9 3 ஆம்
திகதியான இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெறும்.
ஆலய கிழக்கு வாயிலில் சிறிய பிள்ளையார் தேரும் பெரிய சித்திர தேரும் மலர்ச்சரங்கள் நந்திக் கொடிகள் பட்டுச்சறுகைகள் என்பனவற்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட நிலையில் கவர்ச்சிகரமான முறையில் காட்சியளித்துக் கொண்டிருக்கும். அன்றைய தினம் பின்னேரம் ஆலய பிரதம குரு ஆலய குருமார்கள் உதவிக்குரு வண்ண குருமார் குடி சார்ந்த நிர்வாக சபையினர் ஆலய கடமையாளர்கள் சகிதம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி இடம்பெறும். சிறிய விநாயகர் தேரில் விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் பெரிய சித்திர தேரில் தான்தோன்றீஸ்வரர் பெருமானையும் பார்வதி அம்மையாரையும் எழுந்தருள பண்ணுவர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆரைப் பற்றை முருகன் கோயிலில் இருந்து வேல் கொண்டு வரும் விழா ஒன்று இடம் பெறும். இவர்களே வடம் பூட்டும் வைபவத்தை மேற்கொள்வார்கள். இந் நிகழ்வில் ஆலய பிரதம குரு வண்ணக்குருமார்கள் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆலய கடமையாளர்கள் கலந்து கொள்ளும் பக்தி பூர்வமான நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து மக்கள் புடைசூழ மேளதாள வாத்தியங்கள் ஒலிக்க பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா சத்தத்துடன் தேரோட்டம் இடம்பெறும்.
தேரோட்டம் முடிவுற்றதுடன் இரவு 8:00 மணிக்கு முனைக்காடு வீரபத்திரர் சுவாமி ஆலய முன்றலில் திருவட்டை திருவிழா இடம்பெறும். திருவேட்டை ஆடும் போது திருவேட்டை கவி பாடப்படும். திருவேட்டை தத்துவம் – ஆணவ மல மாயையை பன்றியை எம்பெருமான் வேட்டையாடி ஆண்ம ஈடேற்றம் தருவார். இந்நிகழ்வை சூகர வேட்டை என்றும் கூறுவர். (சூஹரம்- பன்றி) பன்றி வேட்டை பதியாகிய இறைவன் பசுவாகிய ஆன்மாவை பிடித்திருக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய முன் மலங்களையும் அழித்து ஆண்ம ஈடேற்றம் நல்கும் அற்புதத்தை வெளிப்படுத்துவதே திருவேட்டை திருவிழாவாகும்.
ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் திருவட்டை முடிவுற்றதும் 2023 9 4 ஆம் திகதி திங்கள் கிழமை காலை 6:00 மணிக்கு எம்பெருமானின் தீர்த்தோற்சவத்துடன் கொக்கட்டி சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவடையும்.
சுபம்
சைவப் புலவர் வே. மகேஸரத்தினம் ஓய்வு நிலை அதிபர் மகிழடித்தீவு.