இந்த நாட்டில் மீண்டுமொரு கலவர சூழலை ஏற்படுத்த முயற்சி.

(சுமன்)

தென்னிலங்கையிலே சில அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் இந்த நாட்டில் மீண்டுமொரு கலவர சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று செயற்படுகின்றார்கள் இதில் நாங்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைபப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பெரிய நீலாவணையில் இடம்பெற்ற மினனொளி கிரிக்கட் நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமுதாயம் கல்வியுடன் சேர்த்து விளையாட்டையும் ஊக்கப்படுத்த வேண்டும். எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் ஒரு கிராமத்தில் விளையாட்டுத் துறையில் 80 வீதமானவர்களை உருவாக்கிய பெருமைகளும் இருந்திருக்கின்றன.

எமது இளைஞர்கள் அயராத முயற்சியும், தன்நம்பிக்கையும் கொண்டவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்திலே இந்த சமூகத்திலே நாங்கள் வாழ முடியும். குறிப்பாக இந்த நாட்டிலே தற்போதிருக்கின்ற பெருளாதார ரீதியில் அதிகமான இளைஞர்கள் வெளிநாடு செல்வதையே காணக்கூடியதாக இருக்;கின்றது. இந்த ரீதியிலே எமது நாடு மிகவும் மோசமானதொரு சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழல் இன்னும் நீடிக்குமானால் இiதைவிட மேலும் மோசமான வறுமை மக்கள் மத்தியில் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நாடு போரால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையை சந்தித்திருந்தும் அது போன்றதொரு கலவர சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று தென்னிலங்கையிலே சில அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் செயற்படுகின்றார்கள். இதிலும் நாங்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள் இவ்வாறான விடயங்களையெல்லாம் கருத்திற் கொள்ளாது அவர்களின் வலைக்குள் சிக்குண்டுவிடாது. எமது பிரதேசத்தில் எமது உரிமை கல்வி உட்பட ஏனைய பொருளாதார ரீதியான வளர்ச்சியிலே முன்நின்று உழைக்க வேண்டும்.

ஆனாலும் எமது இளைஞர்களுக்கான வளங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எதிர்காலத்தில் அதனையும் நாங்கள் நிவாத்தி செய்து எமது இளைஞர் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.