மீனவர் சமாஜ அலுவலகம் விஷமிகளால் சேதம்

(ஏ.எஸ்.மெளலானா)

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள மாளிகைக்காடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜ அலுவலகம் இனந்தெரியாத விஷமிகளினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை (30) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அலுவலக கதவுகள், ஜன்னல்கள் முற்றாக சேதமடைந்திருப்பதுடன் கதிரைகள், மேசைகள் உள்ளிட்ட தளபாடங்களும் உடைந்து சேதமடைந்துள்ளன.

அத்துடன் அலுமாரிகளில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சமாஜத்திற்கான ஆவணங்களும் வெளியில் தூக்கி வீசப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள குறித்த சமாஜ அலுவலகம் அண்மைக் காலமாக எவ்வித செயற்பாடுமின்றி பூட்டிய நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடத் தொகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேவேளை, இப்பிரதேசத்தில் இயங்கி வருகின்ற சில பொது அமைப்புகள் தமது செயற்பாடுகளுக்கு இக்கட்டிடத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கைகளை விடுத்திருந்தன.

எனினும் சமாஜ நிர்வாகத்தினர் இக்கட்டிடத்தை ஒப்படைக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுத் தேவைகளுக்கு பயன்படக்கூடிய இக்கட்டிடம் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்து இப்பகுதி மீனவர்களும் பொது அமைப்பினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.