30ம் திகதி இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க போராட்டத்திற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி முழு ஆதரவு.

(சுமன்) இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுவரை இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கம் எதுவும் இதுவரை கூறவில்லை என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்க்பட்ட உறவுகள் சங்கத்தின் எற்பாட்டில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டப் பெரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவுகூரப் படுகின்றது. அந்த வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை இதுவரை அரசாங்கங்கள் கூறவில்லை. கடந்த 14 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆளும் அரசாங்கம் எதுவும் இதற்கான பதிலை வழங்கவில்லை.

இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கிலே எதிர்வரும் 30ம் திகதி மன்னாரிலும், மட்டக்களப்பிலும் பாரியளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடத்தப்படவுள்ளது. அந்த ஆர்;பாட்டப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் முழு ஆதரவையும் கொடுப்பது மாத்திரமல்லாமல் தேசியத்தின் பால் ஈர்ந்தவர்கள் அனைவரும் கூடுமான அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு எமது உறவுகளுக்கான நீதியைப் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

இவ் ஊடக சந்திப்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் பொ.செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20230828_104043_mfnr.jpg