கரையோர பிரதேசத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத்  தீர்வை  அவசரமாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வேண்டுகோள்.

(யூ.கே. காலித்தீன் ) அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தின் ஹஸனாத் பள்ளிவாசலின் பின்புற கட்டடத் தொகுதியும் மதில்களும்  கடல் சீற்றத்தின் காரணமாக சேதமுற்று காவுகொள்ளப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் பைஸால் காசிமின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணத்திற்கு பின்னராக ஏற்பட்ட கடலரிப்பினால், கடற்றொழிலை பிரதான ஜீவனோபாயமாக கொண்டு வாழும் கரையோர பிராந்திய மக்களின் வாழ்க்கை நிலை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது.
கடலரிப்பினை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை அரசும் மற்றும் திணைக்களங்களும் அவ்வப்போது செய்வது வழமை, இருந்த போதிலும் கடந்த காலங்களை விட தற்போது கடலரிப்பின் சீற்றம் மிக மோசமாக காணப்படுகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பின் வீரியம் அதிகரித்தமையை அடுத்து இன்று  திங்கட்கிழமை (21) மாலை கடலரிப்பின் வீரியம் காணப்படும் இடங்களில் ஜியோ பேக்குகளை இட்டு பாதிப்பினை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிரந்தரத் தீர்வுக்கான திட்டத்தினை தயார் செய்யுமாறும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரை தொடர்பினை ஏற்படுத்தி ஓரிரு தினங்களில் நிரந்தர தீர்வினை மேற்கொள்ள
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடவடிக்கையினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்
அவர்களுக்கு சாய்ந்தமருது மீனவ சமூகமும் ஹஸனாத் பள்ளிவாசல் நிருவாகத்தினரும் நன்றியினை தெரிவிக்கின்றனர்.