கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக வாகன இயக்குனர்ளுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.இதற்கமைவாக 14 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் இப்பயிற்சி நெறிக்குப் பொருத்தமான தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களைத் தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நேர்முக பரீட்சை நிகழ்வின்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக ஒய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரி எஸ். சாமித்தம்பி கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ், அம்கோர் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் இச் சான்றிதழ்களின் மூலம் உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் தொழில்வாய்ப்பை பெற்று கொள்வதுடன் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தமுடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பயிற்சி நெறியானது 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு வழங்கங்கப்படவுள்ளதுடன், அரச சார்பற்ற நிறுவனமான அம்கோரின் (AMCOR) ஆதரவுடன் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.