கறுவாப்பயிர்ச்செய்கையினை பொறுத்தவரை நல்ல நீர் வசதியுள்ள சேதனத்தன்மை அதிகமாகவுள்ள இடங்களில் குறைந்த நிலப்பரப்பில் ஊடுபயிர்ச்செய்கையாக மேற்கொள்ளக்கூடிய பயிராகும். அத்துடன் கன்றினை முறையான பழக்கப்படுத்தல் மற்றும் கத்தரித்தல் மூலம் சந்ததி சந்ததியாக சிறந்த ஆதாயத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தினால் இவ்வருடத்தில் சிறிய அளவிலான வீட்டுத்தோட்டம் (කෘෂි කලාප) மற்றும் புதிய நடுகை (නව වගාව)ஆகிய இரு வகையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிறிய அளவிலான வீட்டுத்தோட்ட திட்டத்தில் ஒரு விவசாயப் பயனாளிக்கு 100 தொடக்கம் 250 வரையான கறுவாக்கன்றுகளும், புதிய மீள்நடுகையில் ஒரு விவசாயப் பயனாளிக்கு 900 கறுவாக்கன்றுகளும் பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட விவசாய முயற்சியாளர்களுக்கும் மானிய விலையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவத்தினை சகல பிரதேச செயலகங்களிலும் உள்ள விவசாயப் பிரிவுகளிலும் மாவட்டச்செயலக மாவட்ட விவசாயப்பிரிவிலும் பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் இணையத்தள முகவரியான www.dea.gov.lk இனுள் பிரவேசித்து விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி குறித்த பிரதேசசெயலகப்பிரிவு அல்லது மாவட்டச்செயலக விவசாயப்பிரிவில் 2023.10.15ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் இடப்பரிசோதனை திணைக்கள உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும்.
ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட விவசாய முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் 5-6 கன்றுகளைக் கொண்ட கறுவா நாற்றுப் பொதியின் மானிய விலை ரூபா 7.00 ஆகும். இதன் அடிப்பமையில் கன்றுகளுக்கான பணத்தொகையினை ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் இலங்கை வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிட்டு பெறப்படும் பற்றுச்சீட்டினை மட்டக்களப்பு மாவட்டச்செயலக விவசாயக்கிளையில் ஒப்படைத்து அங்கு வழங்கப்படும் வழங்கல் கட்டளையினை தன்னாமுனையில் அமைந்துள்ள மேற்கூறப்பட்ட நாற்றுமேடையாளரிடம் வழங்கி கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
கறுவாக்கன்றுகளின் நடுகைமுறை, கன்றுகளைப் பயிற்றுவித்தல் மற்றும் அறுவடைக்குப் பின்னரான தொழினுட்பம் தொடர்பான பயிற்சிநெறிகள் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தரினால் ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விளக்கங்களை மட்டக்களப்பு மாவட்டச்செயலக விவசாயப் பிரிவிலுள்ள ஏற்றுமதி விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்களை பிரதி திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மு.ப 8.30 தொடக்கம் பி.ப 4.15 வரை நேரடியாக வருகை தருவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கறுவாப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு கறுவாக்கன்றுகளினை மானிய விலையில் விவசாய முயற்சியாளர்களுக்கு வழங்கல் -2023
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் வழிகாட்டலுடன் கறுவாப் பயிர்ச்செய்கையானது கோறளைப்பற்று வடக்கு வாகரை, மண்முனை தென்மேற்கு(பட்டிப்பளை) மற்றும் ஏறாவூர் பற்று (செங்கலடி) ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோன்று இவ்வருடமும் கறுவாப்பயிர்ச்செய்கையின் விஸ்தீரணத்தை அதிகரிப்பதற்கு ஏற்றுமதி விவசாயத்திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் கடந்த நான்கு வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ள தன்னாமுனையில் அமைந்துள்ள வீ.சுதாகரன் என்பவரினால் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைய இவ்வருடமும் 15,000 இற்கும் மேற்பட்ட கறுவாக் கன்றுகள் மற்றும் 2,000இற்கும் மேற்பட்ட கமுகங்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கன்றுகள் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட விவசாயப் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.