எதிர்கால சந்ததியினர் மீது அதிகம் அக்கறைக்காட்டப்பட வேண்டும். மன்னார் பிரஜைகள் குழு.

(வாஸ் கூஞ்ஞ)

வெளிநாடு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மன்னாரில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற ஆலோசனை பெறுவதற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினர்களை சந்தித்தது.

திங்கள் கிழமை (07) காலை மன்னார் பிரஜைகள் குழு அலவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பானது மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது சர்வதேச கிறியேற்றிவ் அசோசியேசன் திட்டப் பணிப்பாளர் மத்தியு விற்றிங் இதில் கலந்து கொண்டார்.

இதன்போது கலந்து கொண்ட திட்டப் பணிப்பாளர் மத்தியு விற்றிங் மன்னார் மக்களின் இன்றைய நிலை அவர்களின் எதிர்பார்ப்பு எவ்வாறான உதவிகள் இவர்களுக்கு தேவைப்படும் என அவர் வினவியபோது இவருக்கு ஆளுநர் சபையினர் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவானது ஒரு அரசு மற்றும் அரசுசார்பற்ற நிறுவனமில்லை.

மாறாக இது மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். மக்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அவைகளை நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து நிவர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

பிரஜைகள் குழுவில் இணைந்திருப்பவர்கள் சேவைக்கான சம்பளத்தையோ அல்லது நிவாரணத்தையோ எதிர்பார்க்காமல் சமூகத் தொண்டாற்றுபவர்கள்.

இவ் அமைப்பானது சர்வ மத தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட ஒரு அமைப்பாகும்.

இன்றைய சூழலில் மன்னாரில் மாணவர்கள் மட்டிலும் இளம் சமூகத்தில் மட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலை இங்கு காணப்படுகின்றது.

மேலும் இங்கு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஏக்கத்திலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

போரினால் கணவன் பிள்ளைகள் இழந்து தற்பொழுது பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் இன்றும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. என இவ்வாறு பல விடயங்களை மன்னார் பிரஜைகள் குழு இவருக்கு தெழிவுப்படுத்தியது.