அஸ்மியா அஷ்ரப் எழுதிய “நேந்தம்பியும் நிலாப்பெண்ணும்” நூல் சாய்ந்தமருதில் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருதில் பெண் எழுத்தாளரின் முதல் நாவலான “நேந்தம்பியும் நிலாப் பெண்ணும்” என்ற நாவல் திருமதி அஸ்மியா அஷ்ரபினால் (06) திங்கட்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வெளியிடப்பட்டது.

கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் கௌரவ அதிதியாகவும் , முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ஏ. பீர் முஹம்மட், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம் றிம்சான் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டதோடு,  நூல் நயவுரையை ஏ. பீர் முஹம்மட் வழங்கினார்.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் செயலாளர் கலைஞர் அஸ்வான் மௌலானா பாடலொன்றைப் பாடியதோடு, மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உபதலைவரும் பல்துறைக் கலைஞருமான என்.எம்.அலிக்கான் கவிதை பாடி மற்றும் பாடல் பாடியும் சபையோரைப் பரவசப்படுத்தினர்.
இதன் போது  நூலாசிரியர் திருமதி அஸ்மியா அஷ்ரப் தனது அன்புக் கணவர் அஷ்ரபிடம் முதற் பிரதியைக் கையளித்ததோடு, கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வை அறிவிப்பாளர் எம்.பி.எம்.றிம்ஸான் சிறப்பாக தொகுத்து வழங்கினார்