( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்ட மின் காற்றாலை அமைச்ரால் திறந்து வைக்கப்பட்டது.. அமைப்புக்களின் அனுமதியுடன் இவை அமைக்கப்பட்டபோதும் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் திண்டாடுகின்றார்கள் என மக்கள் இதன் திறப்பு விழாவின்போது எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட்தில் இரண்டாம் கட்டமாக மன்னார் பெரும்நிலப்பரப்பில் நறுவலிக்குளத்திலிருந்து அச்சங்குளம் வரை கடற்கரையோரப் பகுதியில் ஆறு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து மின் விநியோகத்தை ஞாயிற்றுக்கிழமை (06) காலை மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது நறுவலிக்குளம் மக்கள் ஆண் பெண் என இருபாலாரும் அமைச்சர் வந்திறங்கிய இடத்திலும் பின் திறப்பு விழா நடைபெற்ற இடத்துக்கு முன்பாக வீதியிலிருந்து இக்காற்றாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.
இப்போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே’ சிறுவர் தொடக்கம் பெரியோர் வரை நிம்மதியாக தூங்க வழிவிடு’ ‘கால் நடை இருப்பிடங்களை அழிக்காதே’ ‘அரசியல்வாதிகளே எங்கள் கடிதங்கள் கிடைக்கவில்லையா?’ போன்ற வாக்கியங்கள் காணப்பட்டன.
காற்றாலைகள் அமைக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதியிடம் வினவியபோது
இப்பகுதியில் காற்றாலை அமைக்க அன்று எமது சபையிடம் அனுமதி கேட்கப்பட்டபோது இப்பகுதி மக்கள் சம்மதம் இன்றி அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தோம்.
பின் இப்பகுதி அமைப்பக்கள் பங்கு சபையினர் காற்றாலை அமைக்க சம்மதம் தெரிவித்து எமக்கு கடிதங்கள் தந்தபின் எங்கள் சபையும் இப்பகுதியில் காற்றாலை அமைக்க மறுப்பு இல்லையென தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு இருக்க ஏன் இன்றைய (06) இத்திறப்பு விழாவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என இதன் எற்பாட்டாளர் ஒருவரிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது
காற்றாலை அமைக்கும் ஆரம்பத்தில் எமது அமைப்புக்களிடம் இதனால் எந்தவித பாதிப்புகளும் எற்படாது என தெரிவித்தே சம்மதம் பெற்றுள்ளனர்.
எமது அமைப்பகளும் மக்களுக்கு தெரிவிக்காத நிலையிலேயே சம்மதக் கடிதங்கள் வழங்கியுள்ளனர். ஆனால் இப்பொழுது இங்கு வாழும் மக்கள் இதனால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது.
இதில் இரண்டு காற்றாலைகள் நறுவலிக்குளம் மக்கள் செறிந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இது பெரும்பாதிப்பை மக்களுக்கு உண்டுபண்ணி வருகின்றது.
இப்பகுதி மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையிலேயே இவை இடம்பெற்றுள்ளதால் நாம் எமது எதிர்ப்பை காட்டுகின்றோம் என தெரிவித்தனா.