சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள  பாலத்தால்  பயணிக்க முடியாத அவலம்.

(அஸ்ஹர்  இப்றாஹிம்)    சாய்ந்தமருது மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது  வைத்தியசாலை  வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள  பாலம் ஒடுக்கமாக அமைந்துள்ளதால் அதனூடாக பயணிப்பதில் பொதுமக்களும், வாகன சாரதிகளும் பலவிதமான வருடங்களாக பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இப்பாலத்தின் ஊடாக பழைய ஆஸ்பத்திரி  வீதி உப தபாலகம்,  றியாலுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா ,வாசிகசாலை,  பள்ளிவாசல், ஆயுள்வேத மருந்தகம், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் மருந்து களஞ்சியம்  ஆகியவற்றிற்கு பயணிக்க வேண்டியுள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இந்த பாலத்தினூடாக பாரிய வாகனங்கள் பயணிக்க முடியாத துரதிஸ்டம் கடற்கரையை அண்டி வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அந்த நேரத்தில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நூற்றுக்கணக்கான சர்வதேச  தன்னார்வு நிறுவனங்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில்  மீள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போதும்  அரசியல்வாதிகளின் கண்களில் இப்பாலம் தென்படாமல் போனது ஆச்சரியமாக உள்ளதாக மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் நீண்ட நாள் கனவாகும்.