நீர்க்கட்டண அதிகரிப்பு குறித்து ஆத்திரம் கொண்ட எதிர் கட்சி தலைவர் சஜித்

ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக தெரிவிக்கப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ஒடுக்கும் தன்னிச்சையான செயலாகும் என்றும், மக்களின் தோள்களில் சுமையை ஏற்றி எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (03) தேசிய சேமிப்பு வங்கியின் ஐக்கிய ஊழியர் சங்க நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில நாட்களில் எரிவாயு விலையும் அதிகரிக்கப்படும் போது மக்கள் ஆதரவற்றுப்போவர் என்றும்,அரசாங்கம் மக்கள் மீது எந்த உணர்வும் இல்லாது செயற்படுவதாகவும்,மக்களின் வாழும் உரிமையையும் கூட மீறியுள்ளதாகவும்,இது மக்கள் விரோத மனிதப்படுகொலை அரசாங்கமா என்ற சந்தேகம் எழுவதாகவும், அதிகரித்துள்ள நீர் கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும்,பௌத்த மக்களின் தலைசிறந்த இடமான மிஹிந்தலை புனித ஸ்தலத்திற்கு இழைக்கப்பட்ட அரசாங்கத்தின் இழிவான செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும்,நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்துள்ள வேளையில், அதியுர் சட்டத்தையும் மீறி அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த இழிவான நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய பௌத்த ஆலோசனைக் குழுவும் ஒன்றாக இணைந்து விகாராதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த செலவை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும், அரசாங்கத்தின் இந்தச் செயல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த பணத்தை ஜனாதிபதி நிதியத்தில் இருந்தோ அல்லது புத்தசாசன நிதியத்தில் இருந்தோ செலுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.