மருதமடுவில் ஜனாதிபதி! பாதுகாப்பு பலப்படுத்த ஏற்பாடு.

( வாஸ் கூஞ்ஞ)   எதிர்வரும் ஆவணி மாத மடு பெருவிழாவில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதால் ஆலய வளாகத்துக்குள் நுழைவோர் மீது பரிசோதனைகள் இடம்பெற இருப்பதால் பெருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள வருவோர் நேரகாலத்துடன் வருவது நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் யாத்திரிகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின்  ஆவணி மாத பெருவிழாவானது 06 ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 15 ந் திகதி பெருவிழா இடம்பெற இருக்கின்றது.

இப்பெருவிழாவை முன்னிட்டு மடு பெருவிழா அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மற்றும் புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமசிங்க ஆகியோர் மடு விழாவில் கலந்துகொள்ள இருப்பதால் மடு பெருவிழா அன்று பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

ஆகவே இப்பெருவிழாவை முன்னிட்டு மடு ஆலய வளாகத்துக்குள் நுழையும் பக்தர்கள் ஆறு நுழை வாயில்களிலும் பாதுகாப்பு படையினரால் கடும் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருப்பதாக பாதுகாப்பு பிரிவுகளால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) மடு ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆகவே பெருவிழா அன்று காலையில் பெருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள வருவோர் வழமையைவிட நேரக்காலத்துடன் வருவது நலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.