(ஏ.எஸ்.மெளலானா) ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் சந்திப்பும் மத்திய குழு புனரமைப்புக் கூட்டமும் ஞாயற்றுக்கிழமை (06) முற்பகல் 10.00 மணியளவில் கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கிறார்.
இதன்போது நீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள கட்சியின் கல்முனை தொகுதிக்கான மத்திய குழுவுக்கு நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் அதிகார சபையொன்றும் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் கல்முனைத் தொகுதியில் கட்சிக்கு புத்துயிரளிக்கும் வேலைத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன. கட்சியின் பழைய அங்கத்தவர்களை ஒன்றிணைத்தல், புதிய அங்கத்தவர்களை சேர்த்தல், கட்சிக்கான ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும் கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான முன்னாள் பிரதம அமைப்பாளருமான மயோன் முஸ்தபா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.