மீண்டும் ஐக்கிய தேசிய  கட்சியில் இணைகிறார் மயோன் முஸ்தபா ?

(ஏ.எஸ்.மெளலானா)   முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார் என தெரிய வருகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருனாநாயக்க ஆகியோர் ஊடாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை மயோன் முஸ்தபா சாதகமாக பரிசீலித்திருப்பதாக அறிய முடிகிறது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் கலந்து கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நாடு பூராகவும் கட்சி புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தலைமைத்துவம் வழங்க முன்வருமாறு மயோன் முஸ்தபாவிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் O6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் பங்குபற்றுதலுடன் கல்முனையில் இடம்பெறவுள்ள கட்சியின் புனரமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் சிறிகொத்தாவில் இடம்பெற்ற சந்திப்பிலும் பாலித ரங்கே பண்டார பிரஸ்தாபித்துள்ளார்.
இந்நிலையில் கல்முனையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் மயோன் முஸ்தபாவும் கலந்து கொண்டு, கட்சிப் பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி மத்திய குழு புரைமைப்புக் கூட்டமும் கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பும் எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.