நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவையை முன்னெடுக்கக் கோரிக்கை.

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் -போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 20ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 16ஆம் திகதி வரை 25தினங்கள் இடம்பெறவுள்ளது.இதற்கு நாடு பூராகவும்,வெளிநாடுகளிலும் பக்தர்கள் உள்ள நிலையில் பக்தர்களின் வருகையை இலகுபடுத்தும் முகமாக மகோற்சவ காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பது அவசியமாக உள்ளது.

மஹோற்சவ காலங்களில் தற்போது செயற்பாட்டில் உள்ள புகையிரத ஆசனங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலை காணப்படுகிறது.எனவே முன்பதிவு செய்யாதவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்ற கூடுதலான புகையிரத சேவை அவசியமாக உள்ளது.

இதனூடாக வெளி மாவட்டவர்கள், புலம்பெயர் தேசத்தவர்கள் இலகுவாக பாதுகாப்பான மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைய முடியும்.கூடுதலான ரயில் சேவைகளை ஈடுபடுத்துவதன் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான சுற்றுலா துறையையும் ஊக்குவிக்க முடியும் என மேலும் அவர் தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.