இனப்பிரச்சனையை தீர்க்க புது வியூகத்தை வகுக்க வேண்டும்- பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சரவணபவன்.

இனியும் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருராமல் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாம் புது வியூகம் வகுக்கவேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாயன்மார்கட்டு பாரதி சனசமூக நிலைய கட்டட திறப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.

வல்லரசுகளையும் எங்களை நோக்கி வரச் செய்வதற்குரிய திட்டங்களை தீட்டவேண்டும். நாம் அவர்களுக்குத் தேவை என்பதை உணரச் செய்யும் போது தான் எங்களின் கோரிக்கைகளை அவர்கள் காதுகுடுத்துக் கேட்பார்கள்.
அதற்குரிய வகையில் புதியதொரு பாதையை உருவாக்கவேண்டும்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத்தளத்துக்கு காணியைக் கொடுத்துவிட்டு, தலைநகர் கொழும்பில் சீனாவுக்கு செயற்கை துறைமுகநகர உருவாக்கத்திற்கும் இடமளித்துவிட்டு, சீனாவின் பரம எதிரியான பாரத தேசத்துக்குச் சென்று அந்த நாட்டின் பிரதமரைச் சந்திக்கிறார் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இந்தியாவின் தேவையை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பு தொடர்பிலும் பேசி விட்டு வந்திருக்கின்றார் ரணில். இங்கேதான் சிங்களவர்களின் கெட்டித்தனத்தைப் பார்க்கவேண்டும்.அவர்களால் சீனாவையும் சமாளித்து இந்தியாவையும் சமாளிக்க முடிகின்றது. ஆனால் நாங்கள் இந்தியா, இந்தியா என்று ஒற்றைப்புள்ளியில்தான் இருக்கின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எப்போதும் இந்தியாவையே நம்பியிருந்திருக்கின்றார்கள். அதற்குப் பழக்கப்படுத்தியும் விட்டார்கள். இதனால்தான் என்னவோ நாங்கள் வேறு எதையும் சிந்திக்கத் தலைப்படாதவர்கள் ஆகிவிட்டோம். அல்லது அவ்வாறு சிந்திக்கவிடாமல் எங்களை வைத்திருக்கின்றார்கள். சீனாவுக்கு இடமளித்த பின்னரும் இந்தியாவுக்கு சிறிலங்கா ஜனாதிபதியை அழைக்கும் நிலைமை இருக்கின்றது. ஆனால் இந்தியாவையே இன்றுவரை நம்பியிருக்கும் தமிழர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது.

இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் இன்று 13 மைனஸில் வந்து நிற்கின்றது. 36 ஆண்டுகளாக 13ஐ சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றோம். அதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தேய்ந்து செல்கின்றது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரப் பரவலாக்கமும் இப்படித்தான் இருக்கும். பகிரப்பட்ட எந்தவொரு அதிகாரமும் பறிக்கப்படாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில் நாம் 13ஐ பற்றி பேசி இன்னமும் எவ்வளவு காலத்தை வீணடிக்கப்போகின்றோம். ஒன்றுமில்லாத 13 தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதால் அதற்கு அப்பால் நாம் யோசிக்கவில்லை. எமது சிந்தனைத் தளத்தை விரிவாக்கவேண்டும்.
இனியும் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்காமல் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாம் புது வியூகம் வகுக்கவேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.