ஆசிரியரின் தாலி கொடியை திருடிய சக ஆசிரியர்

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது ,தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தத் ஆரம்பித்துள்ளார்.

இந்தநிலையில் ​​அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் திரும்பி வந்த நிலையில் தனது கைப்பையில் இருந்த தாலி கொடி காணாமல்போயுள்ளதை உணர்ந்து , சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அதிபரினால் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதன்போது மற்றொரு ஆசிரியை அவரது கைப்பையை திறந்து பார்த்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் சந்தேகநபரான ஆசிரியையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட அவர், திருடிய நகையை பாடசாலையின் பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய ஆசிரியரை பொலிசார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.