மட்டக்களப்பில் வழமைபோல் அனைத்து சேவைகளும் இடம்பெற்றது.

வட கிழக்கில் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்றைய தினம் வழமை போன்ற ஒரு நிலையே காணப்பட்ட போதிலும் பொதுமக்களின் நடமாற்றம் சற்று குறைந்த நிலைமையை அவதானிக்க முடிந்ததாக எமது சுபீட்ஷம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள அரச திணைக்களங்களான மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், தபால் சேவைகள், அரச மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் வழமைபோல் இயங்கியது.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவை மற்றும் தனியார் பஸ் சேவை என்பன வழமை போல போக்குவரத்தில் ஈடுபட்ட போதிலும் பஸ்களில் பிரயாணிப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணமுடிவதுடன், மட்டக்களப்பு சந்தையில் வழமைக்கு மாறாக குறைந்தளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்ததுடன், பொது மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டனர்.

பாடசாலைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்குவதையும் அவதானிக்க முடிந்தது.