மட்டக்களப்பு வாவியினை ஆழப்படுத்த நடவடிக்கை

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பின் பிரதான வளங்களில் ஒன்றான வாவியினை தூர்வாரி ஆழப்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு வாவி முகாமைத்துவ விசேட செயலணியினால் மேற்கொள்ளவுள்ளது. இதன் முன்னோடித்திட்டம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவி முகாமைத்துவ செயலணி;யின் இரண்டாவது விசேட கலந்துரையால் செயலனியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (27) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தின் பிராதன வளங்களுல் ஒன்றான மட்டக்களப்பு வாவியினை ஆழப்படுத்தி பராமரித்து பாதுகாப்பதற்கு முண்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஒப்பந்த அழைப்பு நடவடிக்கைகளை துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலகம் மேற்கொள்வது என கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இவ்வாவியினை தூர்வாரி ஆழப்படுத்துவதற்கான இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளல், அதற்கான செலவினத்தினை முகாமைசெய்தல், மேலும் திண்மக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் உட்பட இலத்திரனியல் கழிவுகள் வாவியில் வீசப்படுவதை தவித்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன் முதற்கட்டமாக முன்னோடித்திட்டத்தினை ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு விரைவில் மேற்கொள்ளவும், முன்னோடித் திட்டம் அமுல்படுத்தும் இடமாக மண்முனை வடக்கு பிரதேச செயலனத்திற்குட்பட்ட கல்லடி பாலத்திலிருந்து தன்னாமுணை வரையிலான 9 கிலோமீற்றர் வாவியில் ஒரு கிலோமீட்டர் பகுதியை தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட செயலணியின் கலந்துரையாடலில் அதன் உறுப்பினர்களான வாவி அமைந்துள்ள 8 பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மண்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மகாண மற்றும் மத்திய நீர்பாசன திணைக்களப் பொறியிலாளர்கள், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி ஆணையாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் அதிகார சபை பிரதம பொறியிலாளர்கள், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட மீன்வளர்ப்பு விரிவாக்கல உத்தியோகத்தர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் திணைக்களம், நில அளவைத்திணைக்களம், புவியியல் ஆய்வு சுரங்க பணியகம் ஆகியவற்றின் பிரதானிகள், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மீன்பிடி மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விசேட உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.