“அஸ்வெசும” திட்டத்துடன் இணைத்த சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு

நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “அஸ்வெசும” திட்டத்துடன் இணைத்து மேற்கொள்ளப்படும் சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் (25) இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அஸ்வசும திட்டம் சமுர்த்தி திட்டத்தினூடாக எவ்வாறு இணைந்து மேற்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. .

“அஸ்வெசும” வேலைத்திட்டத்தினால் மக்களை விழிப்படையச் செய்து சமுர்த்தி வங்கிக் கட்டமைப்பை மேலும் பலப்படு்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கி முகாமைத்துவம், கள மற்றும் வங்கி பணிக்குழுவினருக்கு மனப்பாங்கு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டப் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 46000 குடும்பங்கள் குறித்த “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.

மேலும், சமுர்த்தி திட்டத்தின் புதிய பயணப் பாதையாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை தொடர்ந்தும் நலனுதவியில் தங்கியிருக்கும் மனப்பாங்கிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள நாம் முன்வரவேண்டும் என பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இச்செயலமர்வில் மாவட்ட செயலக சிரேஷ்ட முகாமையாளர் எம். மனோகிதராஜ், முகாமையாளர் நிர்மலா மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், வலய உதவியாளர்கள், வங்கி மற்றும் வங்கிச்சங்க கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.