சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ‘இலங்கைக்கு வாருங்கள்’ எனும் தொனிப்பொருளில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று(23) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இடம்பெற்றது.
சுமார் 200 இற்கு அதிமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்ட குறித்த மரதன் ஓட்டப் போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10 கிலோமீற்றர் மற்றும் 5 கிலோமீற்றர் மரதன் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.
5 கிலோமீற்றர் போட்டியில் சிறுவர்களும், முதியோர்களும் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதன்போது 21.1 கிலோமீற்றர் மரதன் ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் ரீ.டபள்யூ.ரத்னபால முதலாமிடத்தினையும், கெலும் தர்மபால இரண்டாமிடத்தினையும், ஸ்டீபன் பார் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர். பெண்கள் பிரிவில் தெரேசா மிடர் முதலாமிடத்தினையும், ஜெவான் பொனரோ இரண்டாமிடத்தினையும், லோரா மெகென்ஸி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
10 கிலோமீற்றர் மரதன் போட்டியில் மார்க்னெஸ் முதலாமிடத்தினையும், சப்னாஜ் உபைதுல்லா இரண்டாமிடத்தினையும், ஜிராட் பீர்னி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர். சிறுவர்களுக்கான 5 கிலோமீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் றிஹான் முதலாமிடத்தினையும், மொஹானி இரண்டாமிடத்தினையும் றினோஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதேவேளை இந்நிகழ்வின்போது பொலிஸ், இராணுவ உயரதிகார்கள், சுற்றுலாத்துறை சார் அதிகாரிகள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், அனுசரணையாளர்க்கு நினைவுச்சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.