வாழைச்சேனையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி ரன்விமன, ஜெயவிமன 2023 வீடமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2023.07.21) பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.எம். இஸ்மாயிலின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அத்துடன் செம்மண்ணோடை 208 டி கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மற்றுமொரு பயனாளியின் வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் பிரிவு உத்தியோகத்தர் என்.எம்.எச். முகம்மட் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேச மட்டங்களில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் மாதாந்தம் சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்காக 200,000/= ரூபா வரை பெறுமதியான வீடு திருத்தம் அல்லது நிருமாணிப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா அதிதியாகவும், சமுர்த்தி திணைக்கள தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆர்.முரளி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.