மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம்

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக யோகேந்திரா ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை (21) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜி.திஸநாயக்க மட்டக்களப்பில் வைத்து வழங்கி வைத்தார்.

இதன்போது கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நியமனத்தினைப் பெற்றுக்கொண்ட புதிய வலயக்கல்விப் பணிப்பாளரிடம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வைத்து, மாகாண கல்விப் பணிப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளருமான செல்வி அகிலா கனகசூரியம் உத்தியோகப்பூர்வமாக பொறுப்புக்களைக் கையளித்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய செல்வி அகிலா கனகசூரியம் மாகாணக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கான வெற்றிடம் நிலவிய நிலையில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை தம்பிலுவில் தேசிய கல்லூரியிலும் கற்று அதன் பின்னர் உயர் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் வணிகப் பிரிவில் சித்தியடைந்து கிழக்கு பல்கலைக் கழகத்தில் வணிகத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிந்தியடைந்த இவர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளராக முதல் நியமனம் பெற்றார். பின்னர் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திலும், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகவும் பின்னர் அவ்வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.