அதிகாரப்பகிர்வு என்பது சரத்வீரசேகராவின் வீட்டுச்சொத்துமில்லை, பாட்டன் சொத்துமில்லை!  பா.அரியநேத்திரன்.மு.பா.உ. சீற்றம்.

இலங்கையின் காலநிலை, அரசியல் நிலை, பூகோளநிலை எது மாறினாலும் இனவாதம் மட்டும் சிங்கள பேரினவாதிகளின் சிந்தனையில் இருந்து இன்னும் மாறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வுக்கு ஒருபோதும் இடமளியோம் என இனவாத பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீர சேகர கூறியுள்ளமை தொடர்பாக தொடர்ந்து கூறுகையில்.

அதிகாரப்பகிர்வு என்பது சரத்வீரசேகராவின் வீட்டுச்சொத்துமில்லை, சிங்கள பேரினவாதிகளின் முதலீடும் இல்லை ஒருநாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய அதிகாரப்பகிர்வு என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948, பெப்ரவரி,04, தொடக்கம் இன்று வரையும் 74, வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் பல ஜனாதிபதிகள், பிரதமர்கள், கட்சிகள் அரசில் இருந்துள்ளது ஆனால் யார் மாறினாலும் தலைகள் மாறினாலும் ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் மாறினாலும் சிங்கள பெரும் தேசியவாதமும் இனவாதமும் தொடர்ந்து கொண்டே செல்கிறது என்பதற்கு சரத் வீரசேகராவின் கூற்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இந்தியப்பிரதமர் மோடியை சந்திக்கும்போது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாக சில வாக்குறுதிகளை வழங்குவார் என்று எதிர்பார்கும் நிலையில் ஜனாதிபதி ரணிலின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலுக்கு தற்போது வலிந்து கட்டிக்கொண்டு இனவாத கருத்துக்களை கக்குகின்றனர் அதில் இப்போது முதன்நிலையில் சரத் வீரசேகர உள்ளார்.

13,வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்ற ஒரு குண்டை ஏற்கனவே ஜனாதிபதி ரணில் தூக்கி போட்டுள்ளார்.
அப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வெறும் பொம்மை நிர்வாகமா செய்கிறார் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

இலங்கையின் ஆட்சியாளர்களின் இனவாத உண்மை முகங்களை அயல் நாடான இந்தியாவும், சர்வதேச நாடுகளும் நன்கு புரிந்துள்ள நிலையில் அவர்களால் கூட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்த முடியாமல் உள்ளது கவலையான விடயம்.

தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்வுக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காவும் பல இலட்சம் மக்களை பலிகொடுத்தும் சிங்கள இனவாதிகளின் மனம் மாறாது தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கூடாது என வலிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்வீரசேகரவை போன்றவர்களை உண்மையான நேர்மையான சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் எதிர்க்கவேண்டும் அதேவேளை அரசுக்கு முட்டுக்கொடுக்கும் யாழ்ப்பாணம்அமைச்சர் டக்லஷ், அங்கயன் இராமநாதன் மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சர்களான சந்திரகாந்தன், வியாழேந்திரன் போன்றவர்கள் அதிகாரப்பகிர்வுக்கு எதிரான கருத்தை கூறும் சரத் வீரசேகரா போன்ற இனவாதிகளுக்கு எதிராக என்ன சொல்லப்போகிறார்கள் என்பதையும் பார்போம் எனவும் மேலும் கூறினார்.