மல்வத்தோயாவிலிருந்து மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளத்துக்கு நீர் கொண்டு வருவதற்கான திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் தற்பொழுது நிதி பற்றாக்குறையால் இடைநிறுத்தப்பட்டிருப்பதால் இவற்றை மீண்டும் அமுல் செய்து மன்னார் விவசாயிகள் இரு போகங்கள் செய்ய வழி சமைக்க வேண்டும் என்று மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல்நாதன் அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைத் திட்டக் குழுவினர் செவ்வாய் கிழமை (18) ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்தனர்.
இக்குழுவில் கட்டுக்கரைத் திட்டத் தலைவர் எம்.எஸ்.சில்வா , செயலாளர் எஸ்.வின்சன் , பொருளாளர் கே.வேதம் , மற்றும் இக்குழுவைச் சார்ந்த இருதயதாஸ் ஜெறோம் , பேதுறுப்பிள்ளை புவனம் என்.எம்.சித்திக் இவர்களுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
இக்குழுவினர் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளாக மல்வத்தோயாவிலிருந்து மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்துக்கு நீர் கொண்டு வருவதற்கான திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இது 2023 ஆம் ஆண்டு நிறைவு பெறுவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதை மீண்டும் ஆரம்பித்து மன்னார் மாவட்ட விவசாயிகள் வருடந்தோறும் இரு நெற் போகங்களும் செய்ய வழி சமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முன்வைத்த பொழுது
ஜனாதிபதி அவர்கள் வெளிநாட்டு நிதி உதவியுடன் இத்திட்டத்தை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும்,
கட்டுக்கரை மூன்று கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்திருப்பதாகவும் இவற்றை புனரமைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியதாகவும்,
கட்டுக்கரைக்குளம் நீர் நிரம்பும்போது அவை குளத்தின் மேல் வான் பாயும் நிலை ஏற்படுவதால் இவற்றை தடுக்க இக்குளத்தில் ஒரு கேற் அமைக்க வேண்டியதையும்.
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை ஒரு கிலோ சம்பா 130 ரூபாவுக்கும் ஏனைய நெல்லை 125 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படும் என அரசு தெரிவித்திருந்தபோதும் அவை நடைமுறையில் இல்லாமையால் மன்னார் விவசாயிகள் பெரும் அவதிகளுக்கு உள்ளாகி இருப்தை சுட்டிக்காட்டியதாகவும்,
குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபை கட்டுக்கரைக் குளத்திலிருந்து மன்னார் பகுதிக்கு குடிநீர் எடுப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதால் இதனால் விவசாயிகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் தோன்றும் என்பதால் இந்த திட்டத்தை தற்பொழுது இடைநிறுத்த வேண்டியும்.
மல்வத்தோயா நீர் கட்டுக்கரைக்குளத்துக்கு வந்தபின்பே இத்திட்டத்தை அமுல் செய்ய அனுமதிக்கும்படியும்
மானிய அடிப்படையில் வழங்கும் உரத்துக்காக வழங்கப்படும் பணத்தக்கான வவுச்சருக்குப் பதிலாக அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிட ஆவண செய்யும்படியும்
மேலும் மன்னார் முருங்கனில் தற்பொழுது இயங்கி வரும் மத்திய நீர்பாசன பணிப்பாளர் அலுவலகத்தை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதால் இவற்றை நிறுத்தி இதை தொடர்ந்து மன்னாரிலேயே இயங்குவதற்கான நடவக்கையையும் எடுக்கும்படியும்
கட்டுக்கரை திட்ட முகாமையாளருக்கு முன்பு வாகனம் அதற்கான சாரதி மற்றும் அலுவலகத்துக்கான ஆளனியும் வழங்கப்பட்டிருந்தபோதும் தற்பொழுது இவைகள் அற்ற நிலை இங்கு காணப்படுகின்றன என இக்குழுவினர் ஜனாதிபதியிடம் இக் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும்
யாவற்றையும் உன்னிப்பாக கேட்டறிந்த ஜனாதிபதி யாவும் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களாக இருப்பதால் யாவற்றுக்கும் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாக இக்குழுவினர் தெரிவித்தனர்.
ஜனாதிபதியுடனhன இச்சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக மன்னார் மாவட்ட கட்டுக்கரை திட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.