மறைந்த மூத்த சிவாச்சார்ய பெருந்தகையுமாக விளங்கிய மகாராஜஸ்ரீ சிவஸ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயில் பிரதம குருவும், ஆதீன கர்த்தாவும் இலங்கையின் மூத்த சிவாச்சார்ய பெருந்தகையுமாக விளங்கிய மகாராஜஸ்ரீ சிவஸ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்களது இழப்புச் செய்தி கவலையளிக்கிறது.
இலங்கையின் வடக்கு எல்லையில் எழுந்தருளியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயிலின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை நாட்டின் யுத்த சூழலுக்கு பின்னரான ஆலயத்தின் வழிபாடுகளிலும், ஆலயத்தின். தொன்மத்தை பாதுகாப்பதிலும் சிவாச்சாரிய பெருந்தகை மிகுந்த அர்ப்பணிப்போடு செயலாற்றியிருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு எனது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணம் சென்று கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றிருந்தார்.
சீரான பண்பாளனாக வாழ்நாள் முழுவதும் சிவதொண்டாற்றிய மதிப்புக்குரிய குருக்களின் ஆத்மா சிவசாந்தியடைய எல்லாம் வல்ல நகுலேஸ்வர பெருமானின் பாதங்களை வேண்டுவதோடு, அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், இந்து மதத்தவர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு