கோணாவத்தை ஆர்.டி.எஸ் வீதி கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டபோது அவ்வீதியின் குறுக்காக அமைக்கப்பட்ட வடிகான்களில் பொருத்தப்பட்ட மூடிகள் நீண்ட காலமாக சிதைவடைந்து காணப்படுகின்றன. இதனால் இவ்வீதியினால் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு நாளாந்தம் பல விபத்துக்களும் இவ்வீதியில் இடம்பெற்று வருகின்றன.
அந்நூர் மகா வித்தியாலயம், தள ஆயுர்வேத வைத்தியசாலை, பொது நூலகம், ஜும்ஆ பள்ளிவாசல், சுகாதார வைத்திய சிகிச்சை நிலையம், கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி காரியாலயம் போன்றவற்றுக்காக இவ்வீதியின் மூலம் பயணிக்கும் பல நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் போன்றோர் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், கடற்றொழில் நிமித்தம் நள்ளிரவு வேளைகளில் இவ்வீதியினைப் பயன்படுத்தி வரும் மீனவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கோணாவத்தை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைக்கும் ஓ.பி.ஏ வீதி அருகில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் நீண்ட காலமாக மூடப்படாமல் காணப்படுவதனால் பல்வேறு விபத்துகள் இடம்பெறுவதோடு, மழை காலங்களில் இவ்வடிகான்களில் நீர் நிரம்புவதனால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுவதுடன், இலை குழை கழிவுப் பொருட்கள் போன்றன நிரம்பி துர்நாற்றமும் வீசி வருகின்றது. குறித்த வீதிகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய துறைசார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
|