(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) பல்துறை ஆளுமையாளர்களை கௌரவிக்கும் “நாதம் விருது” வழங்கல் விழா மட்டக்களப்பில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. BATTINAATHAM பிரதம ஆசிரியர் தர்மலிங்கம் தயாபரன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா கலந்துகொண்டதுடன் நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாத வானந்தா ஜீ, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசல் மௌலவி நியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி. பாரதி கென்னடி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்பு, இறைவணக்கம்
மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை,
வரவேற்பு நடனம், தலைமை உரை, கௌரவ அதிதி உரை, நடனம்,
பிரதம அதிதி உரை என்பவற்றினை தொடர்ந்து பல்துறை ஆளுமையாளர்களுக்கான விருதுகள் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், உள்ளூர் பாடல்களுக்கான பரிசில் வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், இளம் கலைஞர்களின் நடனம் அரங்கேற்றப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரினால் BATTINAATHAM செயலி அங்குரார்பணம் (App Launch) செய்துவைக்கப்பட்டது.
இதன்போது சமூக மேம்பாட்டை கருத்திற் கொண்ட கல்வி செயற்பாடுகள், பாரம்பரிய கலை மற்றும் கலாசாரம், பாரம்பரிய வைத்தியம், மகளீர் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான சமூகம் சார் செயற்பாடுகள், நல்லிணக்கம் சார் சமூக செயற்பாடுகள், சூழல் விழிப்புணர்வு சார் சமூக செயற்பாடுகள், விளையாட்டு துறைசார் சமூக செயற்பாடுகள், சமூகப் பொறுப்புடன் கூடிய சமூக வலைத்தள பாவனை, சமூக அக்கறை கொண்ட ஆன்மீக செயற்பாடுகள், பதவி தாண்டிய சமூக அக்கறை, தன்னலமற்ற தொண்டர் சேவை ஆகிய துறை சார்ந்து சமூகத்திற்காக சேவையாற்றிய பல்துறை ஆளுமையாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட பல்துறைசார் ஆளுமையாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், விசேடமாக சமூக அக்கறை கொண்டு ஊடக செயற்பாடுள் ஊடாக சமூகத்திற்காக சேவையாற்றி வரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊடக செயற்பாட்டாளர்கள் பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.