சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட புளியடிச்சந்தி ரயில் கடவையை மீள திறப்பதற்கான நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக இருந்த புளியடிச்சந்தி பகுதியில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் நேர்ந்தமையால் கடந்த 2016ஆம் ஆண்டு புகையிரத திணைக்களம் மேற்படி பாதுகாப்பற்ற கடவையை மூடி அடைத்திருந்தனர்.
இந் நிலையில் மேற்படி கடவையை வருடக்கணக்கில் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் மாற்றுப் பாதைகள் ஊடாகவும்,சிலர் பாதுகாப்பற்ற ரயில் தண்டாவாளத்திற்கு மேலாகவும் பயணம் செய்து வந்திருந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக துறை சார் அமைச்சருக்கு குறித்த கடவையின் அவசியத்தை வலியுறுத்தி கடவையை மீள திறந்து பாதுகாப்பான ரயில் கடவையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று 14/07 வெள்ளிக்கிழமை யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயிலில் புறப்பட்ட அமைச்சர் பந்துல புளியடிச்சந்தியில் ரயிலில் இருந்து இறங்கி அப்பகுதி மக்களுடன் உரையாடியிருந்தார்.
இதன்போது சாவகச்சேரி நகரசபை ஊடாக ரயில் கடவைக்கு ஊழியர் ஒருவரை நியமிக்கும் பட்சத்தில் எம்மால் தானியங்கி தடை (ரிமோல்ட் கொன்றோல்)ஒன்று அமைத்து பாதுகாப்பான ரயில் கடவையாக புளியடிக் கடவையை மாற்ற முடியும் எனவும்-எனவே கிராம மக்கள் இது தொடர்பாக நகரசபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து ரயில் கடவைக்கு ஊழியர் ஒருவரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேற்படி சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் இணைப்புச் செயலாளர் கு.சிவராம்,புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.